கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு உரிய மருந்தை வழங்க மகள் வேண்டுகோள்


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உரிய மருந்தை வழங்கி சிகிச்சை அளிக்க நோயாளியின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக கரும்பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 21 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 11 பேர் கரும்பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். மதுக்கரை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்கு மேலாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மருத்துவர்கள்  எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கவில்லை. கரும்பூஞ்சைக்கு உரிய மருந்து அரசு மருத்துவமனையில் இல்லாததால், வெளியில் வாங்க வரச் சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து பல மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் கேட்டு பார்த்தும் கரும்பூஞ்சைக்கான மருந்து கிடைக்கவில்லை. மருத்துவர்களும் செவிலியர்களும் முடிந்தால் முயற்சி செய்யலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து கந்தசாமியின் மகள் சுபாஷினி தனது தந்தைக்கு கரும்பூஞ்சைக்கான மருந்தை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 11 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா நேற்று தெரிவித்துள்ள நிலையில், சிகிச்சையும் அளிக்காமல், மருந்தும்  இல்லாமல் நோயாளிகளை படுக்க வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழப்புகள் ஏற்படும் முன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

close