வெற்றி வாகை சூடப்போவது யார்..? ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!


தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கடும் தாக்கம் காரணமாக கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுமையான முடிவுகள் மாலை 5 மணிக்குப் பிறகு தான் வெளிவரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடந்த இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. மேற்கு வங்கம் எட்டு கட்டங்களாக மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அசாம் மூன்று கட்டங்களாக தேர்தலை எதிர்கொண்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு பெரும் அரசியல் கட்சிகளும் தங்களின் முதன்மைத் தலைவர்கள் இல்லாத சூழலில் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும், பல்முனை போட்டிக்கு மத்தியில், தங்கள் தலைமைத்துவத்தை நிலைநாட்ட வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

மேற்கு வங்கத்தில், பாரதீய ஜனதா கட்சி இரண்டு முறை முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜியின் கைகளில் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற போட்டியிடுகிறது. 

அதே போல் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ், ஏஐயுடிஎஃப் மற்றும் போடோலாண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சிகளின் பெரும் கூட்டணிக்கும் இடையிலான போட்டி அசாமில் இருந்தாலும், அசாமை பாஜக எளிதாக கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (பிஜேபி) கூட்டணி எழுந்துள்ளது. முதல் முறையாக பாஜக புதுச்சேரி ஆளும் அரசில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் காங்கிரசின் கூட்டணி மட்டுமல்லாது பாஜகவும் களத்தில் இருந்தாலும், உண்மையான போட்டி கம்யூனிஸ்ட்களுக்கும் காங்கிரசுக்கும் இடையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

close