மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை..! ஆனாலும் கட்சியினர் முகத்தில் சோகம்..! ஏன் தெரியுமா..?

 


மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் திரிணாமுல் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணியில் இருந்தாலும், திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் வருத்தத்துடன் உள்ளனர். இதற்கு காரணம் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி கள நிலவரம் தான்.

மேற்குவங்கத்தில் மார்ச் 27’ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக ஏப்ரல் 29 வரை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் திரிணாமுல் கட்சி மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்குவங்கத்தை தங்கள் கோட்டையாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த தேர்தலில் காணாமலேயே போய்விட்டனர் எனச் சொல்லும் அளவிற்கு தான் நிலைமை உள்ளது.

இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 11.45 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 279 தொகுதிகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் ஆளும் திரிணாமுல் கட்சி 196 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், பாஜக கூட்டணியில் உள்ள ஏஜேஎஸ்யு கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட்கள் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

ஆளும் திரிணாமுல் கட்சி 191 இடங்களில் முன்னிலை வகித்து, மீண்டும் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியான சூழலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து நந்திகிராம் தொகுதியில் பின்தங்கி வருகிறார்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிடும் அவரது முன்னாள் வலதுகரமாக திகழ்ந்தவரும், தற்போதைய பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

11.45 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், சுவேந்து அதிகாரி 27,640 வாக்குகள் வாங்கி முன்னிலையில் இருக்க, மம்தா பானர்ஜி 23,930 வாக்குகளுடன் பின்தங்கி விட்டார்.

இதனால், அதிக தொகுதிகளில் முன்னணியில் இருந்தாலும், மம்தாவின் பின்னடைவாள் கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

close