இனிமேல் நடக்கக் கூடாது… புதிய கட்டமைப்பு தேவை… பிஎஸ்பிபி முன்னாள் மாணவரான கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தல்!!


சென்னை : பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த சம்பவத்திற்கு இந்திய அணியின் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அப்பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போலீசாரும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிஎஸ்பிபி முன்னாள் மாணவரும், இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தைச் சேர்ந்த வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் இருந்து வெளி வரும் செய்திகள் எனது மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. குறிப்பாக, பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் செய்த செயல். நான் அங்கு பயின்றவரையில் இது போன்ற சம்பவங்களும் ஏதும் எனக்கு தெரியவில்லை. ஆனால், தற்போதைய சம்பவங்கள் என்னை பெரிதும் வேதனையடையச் செய்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் அவசியம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

close