மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை: தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் 15 ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. புதிய அரசு பதவியேற்றதும் கொரோனா தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. “தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான கால அவகாசம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறு, குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கும் தாமதக் கட்டணத்துடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

close