வார்னருக்கு வேட்டு வச்ச சன்ரைசர்ஸ்… இனிமே வில்லியம்சன் தான் கேப்டன்!


ஐபில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் தலைமை களமிறங்கிய ஹைதராபாத் அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதையடுத்து நாளை நடக்க உள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் எஞ்சியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் நாளைய போட்டியிலும் எஞ்சியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என்பதை தெரிவிக்க விரும்புகிறது.

மேலும் அணி நிர்வாகம் வெளிநாட்டு வீரர்களுக்கான கூட்டணியையும் நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மாற்ற விரும்புகிறது. இந்த முடிவு என்பது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல. தற்போதைய நிலையில் எஞ்சியுள்ள சீசனில் உள்ள போட்டிகளுக்கு டேவிட் வார்னர் வெற்றியை எங்கள் அணிக்கு பெற்றுத்தர தொடர்ந்து உதவுவார் என்பதை உறுதியாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதற்கிடையில் டேவிட் வார்னரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. மேலும் இவர் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது. இதுவரை 6 இன்னிங்சில் விளையாடியுள்ள வார்னர் 3, 54, 36, 37, 6 மற்றும் 57 என பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் அளவு ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

close