வேலூரில் 40க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு


வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது பாக்டீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாகும். அவை மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன.கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும். பின்னர் மூளைப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பார்வை இழப்பு, உறுப்புகள் பாதிப்பு, உச்சபட்சமாக உயிரிழப்புகூட நேரிடலாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவர்கள்,

கொரோனா தீவிரமாக பாதித்து ஸ்டீராய்டு செலுத்திக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் சிகிச்சையில் இருப்பவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற் கொண்டவர்கள், புற்றுநோய், ஹெச்ஐவி நோயாளிகள் ஆகியோர் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40 பேரில் 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

close